Wednesday, June 29, 2016

மாமல்லையின் உன்னத படைப்பு பூனையின் தவம்

பூனையின் பொய்த் தவம், மாமல்லபுரம்


ஒரு காலத்தில், ஒரு பொல்லாத பூனை, தன் வேலைகளை அனைத்தையும் கைவிட்டு, (பக்தன் ஒருவனின் முறைமையின்படி), தனது கரங்களை உயர்த்திக் கொண்டு, கங்கைக்கரையில் தனது வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டது. தன் இதயத்தைத் தூய்மைப்படுத்திக் கொண்டதைப் போல நடித்து, அனைத்து உயிரினங்களின் நம்பிக்கையையும் பெறும்படி அவற்றிடம் "நான் இப்போது அறம் பயில்கிறேன்" என்று சொன்னது அந்தப் பூனை. நீண்ட காலத்திற்குப் பிறகு, பறவைகள் அனைத்தும் பூனையிடம் நம்பிக்கை வைத்தன. ஒன்றாகச் சென்ற அவை, அந்தப் பூனையைப் பாராட்டின. பறவைகளை உண்ணும் அந்தப் பூனை பறவைகள அனைத்தாலும் வழிபடப்பட்டு, தன் காரியம் நிறைவாகியதாகவும், தனது தவத்தின் பயன் தனக்குக் கிடைத்துவிட்டதாகவும் கருதியது. மேலும் சில காலத்திற்குப் பிறகு, எலிகள் அந்த இடத்திற்குச் சென்றன. பெருஞ்செயலில் பெருமையுடன் உழைத்து, நோன்புகள் நோற்பதில் ஈடுபடும் ஓர் அறம் சார்ந்த உயிரினமாகவே அவை அனைத்தும் எலிகளனைத்தும் பூனையைக் கண்டன. அந்தத் தீர்மானமான நம்பிக்கை அடைந்த எலிகள்,"நமக்கு நிறைய எதிரிகள் இருக்கின்றனர். எனவே, இந்தப் பூனை நமது தாய்மாமனாகட்டும். மேலும் இவர் நமது குலத்தின் முதியவர்களையும் சிறுவர்களையும் எப்போதும் பாதுகாக்கட்டும்" என்று விரும்பின. இறுதியாக அந்தப் பூனையிடம் சென்ற எலிகள்அனைத்தும், "உமது அருளால், நாங்கள் இன்பமாகத் திரிய விரும்புகிறோம். எங்களது அருள்நிறைந்த புகலிடம் நீரே, எங்களது பெரும் நண்பர் நீரே. இதன் காரணமாக, நாங்கள் எங்கள் அனைவரையும் உமது பாதுகாப்பின் கீழ் வைக்கிறோம். அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர் நீர், அறத்தை ஈட்டுவதிலேயே எப்போதும் ஈடுபடுபவர் நீர். எனவே, ஓ! பெரும் அறிவாளியே {பூனையாரே}, தேவர்களைக் காக்கும் இடிதாங்கியைப் போல எங்களைப் பாதுகாப்பீராக" என்றன எலிகள். அதன் பின் என்ன நடந்திருக்கும் என்று யாவரும் அறிவோம். இக்காட்சியை மெய்யான வடிவில் மாமல்லபுரத்தின் அர்ச்சுனன் தபசு என்னும் சிற்பத் தொகுதியில் சிற்ப வடிவாக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தை உற்று நோக்குங்கள். கதையின் தன்மையை யதார்த்தத்தை பல்லவ சிற்பி தன் கைவண்ணத்தில் உயிரோட்டமாக்கியுள்ளான் என்பது விளங்கும். பூனை கையை உயர்த்தி தவம் செய்கிறது. தவத்தினால் அதன் உடல் சற்று மெலிந்து காணப்படுகிறது. ஆனால் அத்தவம் பொய் தவம் என்று உணராத எலிகள், அப்பூனையினை சூழ்ந்து நின்று, கைகளைக் கூப்பியவாறு தங்களைக் காக்க வேண்டுகின்றன. மேலும் அதன் துறவறத்தை வியந்து போற்றுகின்றன. 

Tuesday, June 21, 2016

இராஜகேசரி பெருவழிப் பாதை கல்வெட்டு

இராஜகேசரிப் பெருவழி கல்வெட்டு


கல்வெட்டு வாசகம்

திருநிழலு மன்னுயிருஞ் சிறந்தமைப்ப
ஒரு நிழல் வெண்டிங்கள் போலோங்கி  ஒரு நிழல்போல்
வாழியர் கோச்சோழன் வளங்காவிரி நாடன்
கோழியர் கோக்கண்டன் குலவு.


அகழாய்வுக் குழிகள் அமைக்கப்படும் முறை

Wednesday, June 15, 2016

மதிப்புறு பண்டம்


முனைவர் கோ. சசிகலா, மதுரை


தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் அழகு மணிகள் ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன. அதிலும் கூட கொங்கு நாட்டு அகழ்வில் மிகுதியும் கிடைக்கின்றன. கொடுமணலில் ஓர் ஈமச்சின்னத்தில் 2500 மணிகள் வைத்திருந்தனர். 900 மணிகள், 800 மணிகள், 750 மணிகள், 600 மணிகள் என எண்ணிக்கை மிகுந்த மணிகள் கொடுமணல் ஈமச்சின்னங்களில் வைக்கப்பெற்றிருந்தன. கொடுமணல் வாழ்விடத்தில் இந்த அளவுக்கு எண்ணிக்கையில் மணிகள் கிடைக்கவில்லை. அதனால் ஈமச்சின்னப் பொருள்கள் ஈகை அரிய நன்கலம் (Prestigious goods) என்று தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். இதுபற்றி ஷெரீன் ரத்னாகரர் விரிவாக ஆய்வு செய்துள்ளார். மெசபடோமியா ஆட்சியாளர்கள் இறந்தபின் புதைக்கும் போது இதுபோன்ற மதிப்புமிகு பண்டங்களை வைத்துப் புதைத்தனர். தங்கள் கைவசம் அந்தப் பொருட்கள் இல்லையானாலும் மற்றவர்களிடமிருந்து பொருளைப் பறித்துக் கொண்டுவந்து ஈமக்குழியில் வைத்துப் புதைப்பர். கொடுமணலில் கார்னீலியன் மணிகள் மதிப்புறுப் பண்டங்களாக விளங்கின. ஏனெனில் அவை குஜராத்தில் இருந்து வந்தவை. அவ்வாறே மெசபடோமியாவில் லேபீஸ் ரசுலீ என்னும் மணி வகை மதிப்புறு பண்டமாக விளங்கியது. இவ்வகை மணி சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து அங்கு கொண்டு செல்லப்பட்டவையாகும். இதுகொண்டு தங்கள் பகுதியில் கிடைக்காத பொருள்களே மதிப்புறு பண்டங்களாக விளங்கின என்பது புலப்படும்.

வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட இத்தகைய மதிப்புறுப் பண்டங்களே ஈகை அரிய நன்கலம் எனப்பட்டது. அவை கொடையாக கொடுப்பதற்கு அரியவை. ஆயினும் அவற்றையும் கொடையாக நல்குவது பண்டு சிறந்த மரபாய் இருந்தது. ‘புகழ் எனின் உயிரையும் கொடுக்குவர்’ ஆகிய சான்றோர் பெருமக்கள் தாம் அரிதின் முயன்றுபெற்ற மதிப்புறு பண்டங்களே ஈகையாகக் கொடுத்து அழியாப்புகழ் எய்தினர். அதியமான் ஔவைக்கு ஈந்த நெல்லிக்கனி இதற்கு சான்றாகும்.

பண்டைய தமிழகத்தில் நால்வகைத் திணைகளிலும் இருந்த கனிமவளங்கள் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே குறிப்பிடப்படுகின்றன. கான நாடன் ஆளும் மலைப்பகுதியில் யானைத் தந்தத்தைக் கானவர் எடுக்கின்ற செய்தி பின்வரும் பாடல் அடிகளால் விளங்கும்.

‘புலியொடு பொருந்த புண்கூர் யானை
நற்கோடு நயந்த அன்பில் கானவர்
விற்கழிபட்ட நாமப்பூசல்
உருமிடைக் கடியிடி கரையும்
பெருமலை நாடன் .......................’                                                     (நற்.65)

யானைத் தந்தம் மட்டுமன்றி, மணிக்கல், பொன், தந்த முத்து ஆகியவற்றையும் பெறுவதற்கான இயற்கை வளத்தினைப் பெற்றது நாடன் ஆளும் மலைப் பகுதி. இந்தச் செய்தியைப் பின்வரும் அகப்பாடல் விவரிக்கின்றது.

‘பெருமலைச் சிலம்பில் வேட்டம் போகிய
செறிமடை அம்பின் வல்வில் கானவன்
பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு
நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்
கண்பொருது இமைக்கும் தின்மணி கிளர்ப்பப்
வைந்நுதி வான்மருப்பு ஒடிய உக்க
தெண்ணீர் ஆலிகடுக்கும் முத்தமொடு
மூவேறுதாரமும் ஒருங்குடன் கொண்டு’                                             (அகம்.212)

மலையில் சிறுகுடிகளை உருவாக்கி உணவு தேடும் வாழ்க்கையிலிருந்து, உணவு உற்பத்தி செய்யும் வாழ்க்கைக்கு மாறியதைப் பின்வரும் பாடல் வலியுறுத்தும்.

‘இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத
கருங்காற் செந்தினை கடியுமுண்டன’                                                (நற். 122)

‘கிழங்குகீழ் வீழ்ந்து தேன்மேல் தூங்கி
சிற்சில வித்திப் பற்பல விளைந்து
தினை கிளிகடியும் பெருங்கல் நாடன்’                                                (நற். 328)

நாடன் ஆளுகைக்குட்பட்ட மலைப்பகுதியில் திணை விளைவித்த செய்தி இதனால் அறியப் பெறுகின்றது. நாடன் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் தினை, வரகு, மிளகு, கொள்ளு, இஞ்சி, துவரை ஆகியவை பயிரிடப்பட்டன என்பதற்கு சங்க இலக்கியத்தில் பல சான்றுகள் உள்ளன. இவை மட்டுமின்றி, தேக்கு, அகில் போன்ற மரங்களும் நாடன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் விளைந்தன. தேக்கு நிறைந்த பகுதியைத் தேக்கமல் என்று கூறுவர். தேக்கு, அகில், மிளகு, மணிக்கல், பொன், யானைத்தந்தம் ஆகியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலை ஏற்பட்ட பின் அவற்றின் பொருளியல் சிறப்பு உணரப் பெற்றது. கால்நடை வளர்ப்பு சமூக ஆக்கத்திற்குப் பயன்பட்டது. யானைத் தந்தம், கல்மணி, பொன் ஆகியன மூவேறுதாரங்கள் என்று குறிக்கப்பெற்றன. நாடன் ஆட்சிக்குட்பட்ட பகுதி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பெறும் தகுதி வாய்ந்த பண்டங்களே உற்பத்தியாகும் பகுதியாக விளங்கியது.

இவ்வாறு ஏற்றுமதி செய்ய தகுதிவாய்ந்த பொருட்களே சமூகத்தில் உற்பத்தி செய்யப்பட்டன. மேலும் இத்தகைய தன்மை வாய்ந்த பொருட்கள் ஆட்சியாளர்களால் மணவினை மூலமாகவும், காணிக்கையாகவும், போரினாலும், வாணிகத்தாலும் பெறப்பட்டு, மதிப்புறு பண்டங்களாக பேணப்பட்டு செயற்கரிய செய்வார் தம் ஈமக்குழியில் வைக்கப்பட்டன.

திணைப்பயிர்கள் அதிகம் விளையும் பகுதிகளில் நெல் மதிப்புறு பண்டமாக கருதப்பட்டிருக்க வேண்டும். பொருந்தில் அகழ்வில் கிடைக்கும் நெல்லை நாம் இவ்வாறு தான் கணிக்க வேண்டியுள்ளது. இங்கு கிடைக்கும் நூற்றுக்கணக்கான கண்ணாடி மணிகளை இப்பகுதியில் கிடைக்காத அரிய பொருளாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறே தேக்கு, அகில், சந்தனம், தேன் முதலிய குறிஞ்சித் திணையான மலைப்பகுதியின் கருப்பொருட்களும் பிற திணைகளில் மதிப்புறு பண்டங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். கரூரில் கிடைக்கும் பொன் அணிகலன்களும் யவன வாணிகத்தால் சிறப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருட்களுள் ஒன்றாகவே கருதப்படுகிறது. யவனர்கள் தமிழகத் துறைமுகத்து முத்துக்களை வாணிகத்தின் மூலம் விரும்பிப் பெறுவதால் அதிகமாக அவர்கள் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக பயணநூல் ஒன்று புலம்புவதையும் நாம் நோக்க வேண்டும். தம் நாட்டில் கிடைக்காத அரிய முத்துக்களை அளவுக்கதிகமாக வாங்கிக் குவித்த யவன நாட்டின் பண்டைய நிலை அதுவே. பொன்னோடு வந்து கறியொடு பெயர்ந்த இலக்கிய வரியும் இதனை உறுதிப்படுத்துகிறது.



குறிப்புதவி நூல்கள்
1.         கா. ராஜன், கொடுமணல் அகழாய்வு ஓர்அறிமுகம், மனோ பதிப்பகம், தஞ்சை. 1994
2.         கா. ராஜன், பொருந்தில் அகழாய்வு
3.      Shereen Ratnagar, Encounters The Westerly Trade of the Harappa Civilization, Oxford University Press, Delhi, 1981
4.         ராம் சரண் சர்மா, பழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள் நிலையங்கள் - சில தோற்றங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை. 1989

5.         அகநானூறு, நற்றிணை (எட்டுத்தொகை நூல்கள்)

Friday, June 10, 2016

வெள்ளி மலை நடுகற்கள்
முனைவர் கோ.சசிகலா, மதுரை

இடம்  : மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டியிலிருந்து வடமேற்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள வௌ்ளி மலை, கருப்பர் கோயிலில் உள்ள வில்லடியான் சாமி இரண்டு நடுகற்கள்.



காலம் : கி.பி.11-12 ஆம் நூற்றாண்டு
செய்தி : அதியம் மகன் அரையன். செயிக்கன் என்பவன் போர்க்களத்தில் இறந்ததமைக்கு நடுகல் இட்டமை.

கல்வெட்டு:
1. உச்சி வடக்கில்
2. மங்கலத்தில்
3. அதியம் மக
4. யரையன் கல்
5. லூன்றி தந்தது
6. பட்டான் யிது
7. செயிக்கன் யிவ
8. ரன் மகன் வால
9. ன்

இடம்  : மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டியிலிருந்து வடமேற்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள வௌ்ளிமலை, கருப்பர்கோயிலில் உள்ள வில்லடியான் சாமி இரண்டு நடுகற்கள்.




காலம் : கி.பி.11-12 ஆம் நூற்றாண்டு
செய்தி : போர்க்களத்தில் இறந்ததமைக்கு நடுகல் இட்டமை.

கல்வெட்டு:

1. . . ந்ந வட
2. க்கில்
3. மங்கலத்து
4. லயார;              
5. ங்கை
6. கல்லூருக
7. ரை நகதுய
8. நனுப்ப
9. ங்கன் யம
10. தாடை
11. . . .
12. ன் ம
13. கன் வெ
14. ள்ளி (யா)
15. ன்

மதுரை மாவட்ட புதிய நடுகற்கள்

            தற்போது மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், கொட்டாம்பட்டியிலிருந்து வடமேற்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள வௌ்ளிமலை என்னும் கிராமத்தில் உள்ள கருப்பர் கோயிலின் அருகே கட்டுரையாளரால் இரண்டு நடுகற்கள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன. கி.பி.11-12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவ்விரண்டு நடுகற்களும் தமிழ்க் கல்வெட்டுகளைப் பெற்றுள்ளன. மேலும் இந்நடுகற்களில் இறந்த வீரர்களின் உருவங்கள் புடைப்புச்சிற்பங்களாக காட்டப்பட்டுள்ளன. உச்சிக்கொண்டையும், காதுகளில் வளையமும், மார்பில் சன்னவீரமும், கழுத்தணிகளும், இடையாடை முடிச்சுடன் கூடிய அரையாடையும் வீரர்களின் ஆடையணிகலன்களாகக் காட்டப்பட்டுள்ளன. முதலாம் நடுகல்லில் வீரர் வலதுகையில் வில்லைத் தாங்கியும், இடதுகையில் நீண்ட வாளைப் பிடித்தபடியும் நேராக நின்ற நிலையில் உள்ளார். இரண்டாவது நடுகல்லில் வீரர் இடதுகையில் வில்லைத் தாங்கியும், வலதுகையில் நீண்ட வாளைப் பிடித்தபடியும் நேராக நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளார்.

      இந்நடுகற்கள் கூறும் கல்வெட்டுச் செய்தியானது வடக்கில் மங்கலம் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையில் இறந்த இருவீரர்களுக்கு நடுகல் எடுக்கப்பெற்றமையைக் குறிப்பிடுகிறது. முதலாம் நடுகல் சண்டையில் இறந்த செயிக்கன் என்பவனுக்கு அதியம் அரையன் மகன் கல்லூன்றித் தந்ததைக் குறிப்பிடுகிறது. இரண்டாம் நடுகல்லில் இறந்த வீரன் பெயர் வௌ்ளியான் எனக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.